தவெக ஆட்சி | விமர்சித்த மு.க.ஸ்டாலின்.. கண்டித்த மா.கம்யூனிஸ்ட்!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் உள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதத்தை தவெக ஆட்சி நெருங்க உள்ள நிலையில், அவ்வாட்சி மீது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்து வருகின்றன. இந்த நிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுகவைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அதன் அடிப்படை யிலேயே தற்போது பணியாற்றி வருகிறோம். இன்றைக்கு தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சி எப்படிப்பட்டது என்றெல்லாம் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசு பொறுப்பேற்றபோது, 'ஆறு மாதங்களுக்கு இதைப் பற்றி நான் பேசப் போவ தில்லை' என்று கூறினேன். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்தது. அத்தகைய சூழலும் தற்போது வந்துவிட்டது. 6, 5, 4 மாதங்கள்கூட அல்ல, இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் மாற்றுக் கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், ”தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் போராடுவோம். இதை இப்போதும் சொல்கிறேன்... எதிர்காலத்திலும் சொல்லுவேன். ஏனெனில், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பிரச்னைகளில் யார் குரல் கொடுத்தாலும், யாருடைய ஆதரவைப் பெற வேண்டும் என்றாலும் அதற்கான முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யாராக இருந்தாலும் மூன்று மாதம் கூட இந்த ஆட்சி தாங்காது எனக் கூறுவது தவறு" எனத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அக்கட்சி, தற்போது தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துள்ளது.

