”உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி; குதிரை பேர குற்றச்சாட்டு” - மு. வீரபாண்டியன் கூறுவது என்ன?
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக வென்றிருந்தாலும், ஆட்சியமைக்க பெரும்பான்மை கொடுக்காத நிலையில், இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்திருக்கிறது. அதேசமயம், தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தவெக தெரிவித்திருந்த நிலையில், ஆதரவளித்த கட்சிகளை அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்தது தவெக. இந்த அழைப்பை அடுத்து, விசிக, ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்று இருக்கின்றன. எனினும், இடதுசாரிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு என்பதில் தீர்க்கமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் தவெக தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டத்திலும் சிபிஐ மற்றும் சிபிஎம் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கின்றனர். இதையடுத்து, தங்களது ஆட்சியின் நிலைத்தன்மையைப் பலப்படுத்தவும், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டும் அதிமுகவின் நிர்வாகிகளை முதல்வர் விஜய் இணைத்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தவெக குதிரைபேரம் நடத்திவருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேபோல, தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகளும் இதுகுறித்து விமர்சித்து வரும் நிலையில், அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாகவே விலகி தவெகவில் அக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் இணைந்திருக்கின்றனர் என தவெக தெரிவித்து வருகிறது.
இந்தசூழலில் தான், தனியார் நாளிதழ் ஒன்று பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதுவரை, குதிரை பேரம் என்று பேசாமல் இருந்து வந்த சிபிஐ, தாங்கள் ஆதரவளித்திருகும் தவெக குறித்து குதிரை பேரம் எனப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவர் பேசுகையில், ”குதிரை பேரங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நீங்களும் நானும் அதற்குச் சாட்சிகள். அது நம் கண் முன்னே அரங்கேறுவதை நாம் காண்கிறோம். மறைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. இந்தக் கலாச்சாரம் வட இந்திய மாநிலங்களிலிருந்து படிப்படியாகத் தமிழ்நாட்டிற்குப் பரவியுள்ளது. இது மாநிலத்திற்கு நல்லதல்ல என்பதால், இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், "இது ஜனநாயகத்திற்கு ஒரு நெருக்கடி மற்றும் அரசியல் நெறிமுறைகளை மீறுவதாகும்," என்று கூறிய அவர், இதில், ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், குதிரை பேரங்களை இடதுசாரிகள் எதிர்ப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேசமயம், எங்கள் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தவெக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்ததாகவும், அரசாங்கத்தை நிலை குலையச் செய்வதோ அல்லது அதற்கு அழுத்தம் கொடுப்பதோ எங்கள் நோக்கமல்ல எனவும் நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டி
அதேபோல, உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாடு குறித்துப் பேசிய அவர், வரவிருக்கும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகள் தங்களது அமைப்பு பலத்தைச் சோதிப்பதற்காகத் தனித்துப் போட்டியிடும் எனவும் அரசியல் சூழ்நிலைகள் தேவைப்பட்டால், எதிர்காலத் தேர்தல்களிலும் இதே உத்தியைக் கையாள இடதுசாரிகள் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, வரவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தங்கள் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அப்போதைய அரசியல் சூழ்நிலைகள் வைத்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

