\
CPI Chief C Mahendran joined Vijays TVK
சி.மகேந்திரன்எக்ஸ் தளம்

திடீர் முடிவெடுத்த சிபிஐயின் மூத்த நிர்வாகி.. தவெகவில் ஐக்கியம்.. தொடர்ந்து பலம்பெறும் விஜய்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்துவந்த சி.மகேந்திரன், இன்று அந்தக் கட்சியில் இருந்து விலகி, தவெகவில் ஐக்கியமானார்.
Published on

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தவிர அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தவெகவில் ஐக்கியமாகினர். தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி, பரமக்குடி முருகேசன் மற்றும் நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏவான விஜயதாரணியும் பாஜகவில் இருந்து விலகி, தவெகவில் போய் இணைந்தார்.

அதேநேரத்தில், சமீபகாலமாக அதிமுகவைச் சேர்ந்தவர்களே தவெகவில் அதிகளவில் இணைந்துவருவது தமிழக அரசியல் களத்தில் விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனும் தவெகவில் இன்று இணைந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்துவந்த சி.மகேந்திரன், இன்று அந்தக் கட்சியில் இருந்து விலகி, சென்னைப் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமானார். தவெகவில் இணைந்தது குறித்து சி.மகேந்திரன், “ஊழலை ஒழிக்க முடியும் எனும் பெரும் நம்பிக்கையை நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தந்துள்ளார். அதன் காரணமாக நான் தவெகவில் இணைந்துள்ளேன். சிவப்புத் துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன். தவெகவின் வெற்றி, சாதியை ஒழித்துள்ளது. இந்தத் தேர்தலில் சாதி தோற்கடிக்கப்பட்டுள்ளதை அரசியலில் வியந்து பார்க்கிறேன்” என்றார்.

நாளுக்கு நாள் பிற கட்சிகளிலிருந்து விலகி, தவெகவில் இணைந்து வரும் நிர்வாகிகளால் முதல்வர் விஜயின் தவெக பலம் பெற்றுவருகிறது.

CPI Chief C Mahendran joined Vijays TVK
விஜயதாரணி டு பாலகங்கா.. ஒரேநாளில் தவெகவில் ஐக்கியம் ஆன நிர்வாகிகள்.. சரியும் அதிமுக கோட்டை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com