விஜயதாரணி டு பாலகங்கா.. ஒரேநாளில் தவெகவில் ஐக்கியம் ஆன நிர்வாகிகள்.. சரியும் அதிமுக கோட்டை!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தவிர அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜ் உள்ளிட்ட தலைவர்களும் தவெகவில் ஐக்கியமாகினர். இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவான விஜயதாரணியும் பாஜகவில் இருந்து விலகி, தவெகவில் போய் இணைந்துள்ளார். மாற்றுக்கட்சியினர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், இன்றும் சிலர் இணைந்துள்ளனர்.
அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் அவர்கள் தவெகவில் இணைந்தனர்.முன்னாள் எம்.பி.க்கள் வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி, பரமக்குடி முருகேசன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். சமீபகாலமாக, அதிமுகவைச் சேர்ந்தவர்களே தவெகவில் அதிகளவில் இணைந்துவருகின்றனர். இதனால், அதிமுகவின் கோட்டை சரிவைக் கண்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

