கோவை | ”எனக்கு பயமாக இருக்கிறது” கல்லூரியில் பிரச்னை; பிறந்தநாளில் மாணவர் விபரீத முடிவு! ஷாக் ஆடியோ!
செய்தியாளர்: சுரேஷ்குமார்
திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் சத்யநாராயணன் (20). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில், கல்லூரியில் ஏற்பட்ட பிரசனையின் காரணமாக நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் மாணவர் சத்ய நாராயணன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், “நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். பயமாக இருக்கிறது. ஏதாவது செய்து விடுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது” என்று பேசியுள்ள மாணவர், தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்ட போது, சக மாணவர்களுடன், இறந்த மாணவனுக்கு ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் சமரசம் செய்து எழுதி வாங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்து மாணவரின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.