செய்யாறு | ”அங்க போக வேண்டாம்; எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை” - போலீசாரிடம் காதல் ஜோடி கண்ணீர்!
செய்தியாளர் : புருஷோத்தமன்
செய்யாறு காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று தஞ்சமடைந்த நிலையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை ச் சேர்ந்த காதல் ஜோடி வழக்கறிஞர் மூலம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது காஞ்சிபுரம் மாவட்டம் கோலி வாக்கத்தைச் சேர்ந்த தீனதயாளன் வயது 22 ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும் இதே போல் காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த வினிதா வயது 21. இவரும் அதே தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவர் வீட்டிலும் இவரகளது காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இருவரும் சென்னை வில்லிவாக்கம் சுப்பிரமணியர் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டு, செய்யாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், பெண் வினிதாவின் பெற்றோர் அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், காதல் ஜோடிகளை காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் செய்யாறு காவல்துறையினர்.
இதனிடையே, காதல் ஜோடி பயத்தில் அலறி துடித்து அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.