சாலை பணியின்போது நேர்ந்த அலட்சியம்... பெற்றோர் உயிரிழந்தநிலையில்,நிற்கதியாய் விடப்பட்ட சிறுமி!
சாலை பணியின்போது நேர்ந்த அலட்சியம் இருவரின் உயிரை பலி வாங்கியுள்ளது. திருப்பூர் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவனும் மனைவியும் உயிரிழந்த நிலையில் அவர்களது 13 வயது மகள் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சேர்வக்காரன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவர் தன் மனைவியுடனும் 13 வயது மகளுடனும் திருச்செந்தூர், திருநள்ளாறு சென்றுவிட்டு தாராபுரம் திரும்பியுள்ளார்.
தாராபுரம் பேருந்துநிலையத்திலிருந்து இரு சக்கரவாகனத்தில் வீடு திரும்பும்போதுதான் அந்த விபரீதம் நடைபெற்றுள்ளது. நள்ளிரவு மூன்றரை மணியளவில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளார் நாகராஜ். அப்போது தடுமாறி எதிரே இருந்த பெரிய பள்ளத்தில் வண்டியோடு 3 பேரும் விழுந்தனர்.
இந்த விபத்தில் தம்பதி இருவரும் தலையில் அடிபட்டு இறந்த நிலையில் காலில் பலத்த அடிபட்ட 13 வயது சிறுமி தீட்சனா விடியவிடிய வலியால் சுமார் மூன்றரை மணி நேரம் கதறிக்கொண்டிருந்துள்ளார்.
விடிந்துவிட்டபின் அப்பகுதி வழியாக வந்த ஒரு சுற்றுலா வேனில் இருந்தவர்கள் சிறுமியின் சத்தத்தை கேட்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். கணவனும் மனைவியும் இறந்திருந்த நிலையில் சிறுமி மட்டும் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு கோவையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.