கோடி கோடியாக லஞ்சம்.. அரசு அதிகாரிகள் நடுக்கம்.. நீதிபதி சொன்ன ஒரேயொரு வார்த்தை!!
செய்தியாளர் - கார்த்திகேயன்
லஞ்சம் பெற்றதாக கூறி கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு, திருச்சி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருந்தது. மேலும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது. சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இதையடுத்து, பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார். எனவே, சொத்துக்களை பறிமுதல் செய்யும் உத்தரவு அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது எனக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும், ஊழல் குற்றங்களை, பிற குற்றங்களைக் காட்டிலும் மிகவும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ள ஊழல் என்ற தீய பழக்கத்தை எதிர்த்துப் போராட கட்டாய பறிமுதல் நடவடிக்கைகள் அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஆனால், ஊழல் வழிகளில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களை, கட்டாயமாக பறிமுதல் செய்ய வேண்டும் என தற்போதைய சட்டம் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. எனவே, ஊழல் தடுப்பு சட்டத்தில், தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஊழல் வழிகளில் பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கட்டாயமாக பறிமுதல் செய்யும் வகையில், சட்டம் வரவேண்டும் என்றும், நீதிபதி தெரிவித்தார்.
இதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு அச்சம் கொள்வார்கள் என்றும், நீதிபதி கூறினார். இதுதொடர்பாக அரசு முன்முயற்சி எடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இறுதியாக, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி புகழேந்தி, மனுவை அனுமதித்து உத்தரவிட்டார்.

