நதிக்கரை அரசியல் | திராவிடக் கொள்கைகள் வேர்பிடித்த பகுதி.. தலைநகரில் வெற்றி யாருக்கு!
3இன்று ஒரு கழிவுநீர்க் கால்வாயாக பார்க்கப்பட்டாலும், வரலாற்றிலும் இலக்கியத்திலும் ‘கோவளம்’ நதி என்று போற்றப்பட்ட பெருமைமிக்க முகம் கூவம் நதிக்கு உண்டு. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே தொடங்கி, சென்னை மாநகரின் இதயப்பகுதி வழியாக சுமார் 72 கி.மீ பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது கூவம் நதி. அதிரம்பாக்கம், பல்லாவரம், மாமல்லபுரம் என வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பல்லவர் காலம் வரை பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த முக்கியத் தொல்லியல், கலைச் சின்னங்கள் இதன் கரைக்கருகே அமைந்துள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் வாழ்வோடும், அரசியலோடும் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டது இந்த கூவம். நீதிக்கட்சி காலம் தொட்டே திராவிடக் கொள்கைகள் வேர் பிடித்த பகுதி என்பதால் 1957இல் திமுக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே இங்கு முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டது. 1959இல் சென்னை மாநகராட்சி திமுக வசமானது. அதிமுக தொடங்கப்பட்ட பின்னர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இந்த பகுதிகளில் அக்கட்சி பெற்றாலும், திமுக தனது பிடியை எப்போதும் இங்கு இழக்கவில்லை.
1991, 2011 ஆகிய தேர்தல்களில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தபோதும் இந்த பகுதிதான் அதன் மூச்சுக்காற்றை தக்கவைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளில் 35 தொகுதிகள் திமுக கூட்டணிக்கே சென்றன. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும், தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் இடதுசாரி கட்சிகளும் இங்கே குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைத் தக்கவைத்துவருகின்றன.
விசிக, பாமக ஆகிய கட்சிகளும் இந்த பகுதிகளில் தங்கள் கட்டமைப்பை வலிமையாக்கியுள்ளன. தமிழ்நாட்டில் வாழும் அத்தனை சமூக பிரதிநிதிகளும் சென்னையில் வாழ்கிறார்கள் என்றாலும், ஆதிதிராவிடர், வன்னியர், முதலியார், மீனவர், பிராமணர், யாதவர், நாயுடு, ரெட்டி போன்ற சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கிறார்கள். குறிப்பாக வடசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆதிதிராவிடர், மீனவர் மற்றும் வன்னியர் சமூக வாக்குகளே பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பவையாக உள்ளன. பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் காஞ்சிபுரம் பகுதிகளில் முதலியார் சமூகத்தினரின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வலுவாக உள்ளதால், அந்த வாக்குகள் திமுக அணிக்கு பெரும் பலம். மறுபுறம், பாமகவின் வன்னியர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு செல்லும் என்றாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்து வேட்பாளர்களை நிறுத்துவதால் வாக்குகள் சிதறி திமுக அணிக்கு சாதகமாக அமையக்கூடும். மாநிலத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் தொகை இங்கு அதிகம். இஸ்லாமியர்கள் மண்ணடி, திருவல்லிக்கேணி, பெரம்பூர் போன்ற பகுதிகளில் அடர்த்தியாகவும்; கிறிஸ்தவர்கள் சாந்தோம், ராயபுரம், அடையாறு பகுதிகளில் கணிசமாகவும் உள்ளனர்.
மேலும், சௌகார்பேட்டை, வேப்பேரி போன்ற பகுதிகளில் வடமாநில மக்களும், எல்லைப் பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்களும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தனது ஆதரவு தளத்தை மெல்ல விரித்துவருகிறது. அது அதிமுகவின் பலத்தை அதிகரிக்கும். அதேசமயம் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக அணிக்கு செல்வதை தடுப்பதிலும் பாஜகவின் பங்கு இருக்கும் என்கின்றனர். அதோடு திமுக பல்வேறு முஸ்லீம் கட்சிகளை தனது அணியில் இணைத்திருப்பதால் அந்த வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வரும் என அக்கட்சி கணக்கு போடுகிறது. தனித்தே களம் காண்பதால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வாக்கு சதவீதத்தை அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் அக்கட்சிக்கு இம்முறையும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலில் புதுவரவான தவெக பெருமளவில் கவனம் ஈர்த்துவரும் நிலையில் அக்கட்சித் தலைவர் இந்த மண்டலத்தில் உள்ள பெரம்பூர் தொகுதியில் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரிலும், துணை முதல்வர் உதயநிதி சேப்பாக்கம்- திருவல்லிக்கேனியிலும் போட்டியிடுவதால் சென்னை களம் அனலை கிளப்புகிறது. தேர்தலுக்காகப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கட்சிகள் இந்த நான்கு மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்க வேண்டும். கூவம் மற்றும் அடையாறு நதிகளைச் சாக்கடை என்ற நிலையிலிருந்து மீட்டுத் தூய்மைப்படுத்துவது மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பு.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ விரிவாக்கம் மற்றும் மேம்பாலங்கள் மூலம் தீர்வு காண்பது, சாலைகள் சீரமைப்பு, பருவமழை வெள்ளப் பாதிப்பிலிருந்து நிரந்தரப் பாதுகாப்பு அளிப்பது, மற்றும் ஐடி முதல் உற்பத்தித் துறை வரை உள்ள இளைஞர்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்பை உறுதி செய்வது ஆகியவை இப்பகுதி மக்களின் கோரிக்கைகள்.

