jothimani on tiruchi siva speech about kamarajar
jothimani on tiruchi siva speech about kamarajarPT web

”கட்டுக்கதைகளாலேயே காமராஜர் வீழ்த்தப்பட்டார்!” - திமுக மீது காங். எம்பி ஜோதிமணி காட்டம்

காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா பேசியது சர்ச்சை ஆகியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதி மணி பதிலடி கொடுத்துள்ளார்.
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்தான திமுக எம்பி திருச்சி சிவாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? திருச்சி சிவா சொன்னது என்ன? அதற்கு ஜோதிமணி ஆற்றிய எதிர்வினை என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. கட்சி பேதம் கடந்து, அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் காமராஜருக்கு மரியாதை செய்தனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசத்தொடங்கினார்.

திருச்சி சிவா
திருச்சி சிவாதிருச்சி சிவா

அப்போது, தான் இளைஞனாக இருந்தபோதே கருணாநிதி தன்னிடம் பல விஷயங்களை பகிர்ந்ததாகவும், அந்த வகையில் காமராஜர் குறித்தும் சில சம்பவங்களை பகிர்ந்துகொண்டதாகவும் கூறினார்.

“திமுக ஆட்சியில் மின்சார கட்டுப்பாட்டை கண்டித்து காமராஜர் தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டம் போட்டார்.. ஆனால், காமராஜருக்கு ஏசி இல்லை என்றால் உடலில் அலர்ஜி வந்துவிடும். அதனால், அவர் தங்கும் பயணியர் விடுதிகளில் எல்லாவற்றிலும் குளிர்சாதன வசதி செய்யச்சொல்லி உத்தரவிட்டேன்.. நம்மை எதிர்த்துதான் அவர் பேசுகிறார்.. ஆனால் அவரின் உடல்நலம் கருதி குளிர்சாதன வசதி செய்யுமாறு உத்தரவிட்டேன்” என்று கருணாநிதி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக பேசினார் திருச்சி சிவா.

அதோடு, உயிர்போகும் முன்பு கருணாநிதியின் கையைப்பிடித்துக்கொண்டு, நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று காமராஜர் கேட்டுக்கொண்டதாகவும் பேசியுள்ளார் திருச்சி சிவா. இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்பி ஜோதி மணி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் நீண்ட பதிவினை இட்டுள்ளார். அந்த பதிவில், “பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும்,நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும்.

தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .

ஜோதிமணி
ஜோதிமணி

அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வதுஉண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.

காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும்.அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com