”எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவை இல்லை; ராகுல்காந்தி எல்லாம் தருகிறார்” - செல்வப்பெருந்தகை பதில்!
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தவெக தலைவர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”ஜனநாயகம் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று சாலையில் செல்லும் பெண்மணிக்கு கூட தெளிவாக தெரியும். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள் எல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர்.
50, 60 வயதான பெண்மணிகள் கூட 3000, 5000 எது கொடுத்தாலும் வாங்கி கொள்வோம். ஆனால், ஓட்டு அவருக்குத்தான் என்று கூறுகின்றனர். மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் செய்தியாளர்கள் நினைத்ததைப் பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “சுதந்திரத்துக்காக போராடிய வரலாறு இருக்கிற கட்சி, தற்போது நீர்த்துப் போயிருப்பதற்கு காரணம் என்ன..? ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்து தேய்ந்து போய் கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நாம் பவர் கொடுப்பதாக கூறுகிறோம். அவ்வாறு செய்தால் மீண்டும் அந்த வரலாறை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதனால், இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரின் கருத்துக்கு பதிலளித்துள்ள அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, "எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவை இல்லை எங்கள் தலைவர் ராகுல் காந்தி எங்களுக்கு பூஸ்ட் ஹார்லிக்ஸ் என எல்லாம் தருகிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என அறிவித்தும் தவெக கூட்டணிக்கு எந்தக் கட்சிகளும் வராத நிலையில், தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மறைமுகமாக காங்கிரஸை தவெக கூட்டணிக்கு அழைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

