ராகுல் - கனிமொழி சந்திப்பு.. உறுதியான கூட்டணி.. தொகுதிப் பங்கீடு தீவிரம்?
பரபரப்பான சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி சந்திப்பு நடந்திருக்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான இந்தச் சந்திப்பில் நடந்தது என்ன... பார்க்கலாம்..
ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் முன்பைவிட அழுத்தமாக முன்வைத்த நிலையில், திமுகவுடனான அதன் கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருந்தது. இது ஒருபுறமிருக்க தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கு இசைவாகவும் கட்சியில் ஒரு தரப்பினர் பேசிவந்தனர். காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் வைத்த இந்த கருத்துக்கு திமுக தரப்பில் மாற்றுக் கருத்துகள் வந்தன. இதனால் மாற்றிமாற்றி இருதரப்பிலும் சங்கடமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருகட்டத்தில் பதிலடி என்று சொல்லுமளவுக்கு இரு தரப்பிலும் சங்கடமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதனால், இந்த கூட்டணி நீடிக்குமா அல்லது காங்கிரஸ் அணி மாறப் போகிறதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மையானோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், கூடுதல் தொகுதி என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில், டிசம்பர் மாதமே தொகுதிப் பங்கீடு தொடர்பாக தாங்கள் பேசத் தொடங்கியும், இதுவரையில் திமுக தரப்பில் உறுதியான பதில் இல்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளார் கிரீஷ் சோடங்கர் வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். அதற்கு மறுநாளே திமுக துணை பொதுச்செயலரும், திமுகவின் டெல்லி முகமாக முன்னிறுத்தப்படுபவருமான கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்று அதிகாரபூர்வமாக இருவரும் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் சந்திப்பின் விவரங்கள் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்தது.
மிகவும் ஆக்கபூர்வமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பினருமே கூட்டணியைத் தொடர்வதில் தங்களுக்கு உள்ள விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கோரிக்கையை ஏற்க முடியாது என திமுக உறுதிபட தெரிவித்திருக்கிறது. கனிமொழி சொன்ன விஷயங்களை கவனமாகக் கேட்ட ராகுல், காங்கிரஸ் இம்முறை கூடுதல் தொகுதிகளில் நிற்பது அவசியம் என்று தெரிவித்திருக்கிறார். காங்கிரஸுக்கு கூடுதலான தொகுதிகளை ஒதுக்க திமுக விரும்பினாலும், கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிரமம் இருப்பதாக எடுத்துக் கூறியிருக்கிறார் கனிமொழி. முன்னதாக, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி கேட்ட காங்கிரஸ், அந்த எண்ணிக்கையை 30 ஆக குறைத்துக்கொள்வது தொடர்பாக பரிசீலிப்பதாக ராகுல் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம் மாநிலங்களவையில் இரு இடங்கள் காங்கிரஸுக்கு அவசியம் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், மாநிலங்களவையில் இரு இடங்கள் தொடர்பிலும் கனிமொழி தரப்பு பிடிகொடுக்கவில்லை என்று தெரிகிறது. எப்படியாகினும் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி... தொகுதிப் பங்கீட்டில் எத்தனை இடங்கள் என்பது அடுத்த சில நாட்களில் உறுதிப்படும் என்கிறது டெல்லி வட்டாரம். 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரு மாநிலங்களவை இடங்கள் அல்லது 30 சட்டமன்றத் தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா சீட் என்கிற அளவில் தொகுதிப் பங்கீடு முடியலாம் என்கிறார்கள். எப்படியும் இருகட்சிகளும் இணைந்தே 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்... 2019, 2021, 2024 தேர்தல்களை வென்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி , 2026 தேர்தலிலும் தொடரும் என்கிறது டெல்லி காங்கிரஸ் வட்டாரம்.

