அமைச்சர் எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலுPT

திருவண்ணாமலையில் 3 மாதங்களில் புதிய மேம்பாலம் அடித்துச்செல்லப்பட்டது ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று விளக்கம் அளித்துள்ளார்.
Published on

கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் 16 கோடி ரூபாய் செலவீட்டு மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலமானது, இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

இதுகுறித்து இன்று விளக்கமளித்திருக்கும் அமைச்சர் எ.வ.வேலு, “அடித்துச் செல்லப்படுவதால் இவை தரமில்லாத பாலம் என்று அர்த்தமில்லை, தரையில் கட்டப்படுவதும், ஆற்றில் கட்டப்படும் பாலத்தின் விதம் வேறானது” என்று கூறியுள்ளார்.

அடித்துச்செல்லப்படுவதால் தரமற்ற பாலமாகிவிடாது..

மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். உடன் மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் மற்றும் அப்போலோ மருத்துவமனை மேம்பாலப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தனர்.

முன்னதாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் பெரும் மழை பெய்த காரணத்தினால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நூலகத்தை நேரில் ஆய்வு செய்தேன், இதுவரை 13,59,996 நபர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்தி உள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும், தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது” என்று கூறினார்.

மேலும் ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து பேசிய அவர், “நீர் நிலைகளில் பாலம் கட்டும்போது நீர்வளத்துறை பொறியாளர்கள், மழைவெள்ளம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கன அடி வருகிறது என்பதை கணக்கீடு செய்து பாலம் அமைக்கப்படுகிறது. அதன்படி பொதுவாக 52 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்ற அடிப்படையில் பாலம் கட்டுகட்டும்போது, எதிர்பாராத விதமாக இரண்டே கால் லட்சம் கன அடி தண்ணி வரும் பட்சத்தில் பாலம் அடித்துக்கொண்டு போகும் நிகழ்வு நடக்கிறது.

ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாளங்கள் கட்டப்படுகின்றன. ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலங்கள் அதிக அளவில் நீர் வருவதால் சேதமடைகிறது, ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை, எதிர்பாராத விதமாக இது போன்ற ஆற்றுப் பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு ஏற்படுகிறது” என்று விளக்கம் கொடுத்தார்.

திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை..

தொடர்ந்து திருமாவளவன் குறித்து பேசிய அவர், “2001-ம் ஆண்டு முதல் திருமாவளவன் உடன் பழகி வருகிறேன், எதிர்முகாமில் இருந்த காலத்தில் குட திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

எனக்கோ திமுகவுக்கோ திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நட்பை தாண்டி சகோதர பாசத்துடன் பழகக் கூடியவர் திருமாவளவன், அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்” என்று கூறினார்.

எவ வேலு
எவ வேலு

மேலும் “தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து பராமரித்து வருகிறது, நெடுஞ்சாலைகள் பராமரிப்பு என்று காணப்பட்டால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த 48 மணி நேரத்தில் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com