கோவை | தீர்ப்பு வாசிக்கும் முன் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளி – சுவாரஸ்ய சம்பவம்
செய்தியாளர்: ஐஸ்வர்யா
கோவை செல்வபுரம் பகுதியில் மகேஷ் என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு மூன்று பேர் வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு ரூ.1 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட இருந்தது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான மதிவாணன் ஏற்கெனவே தலைமறைவாக உள்ள நிலையில், மூன்றாவது குற்றவாளியான ரமேஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டாவது குற்றவாளியான செந்தில் குமார் என்பவர், நீதிமன்ற வளாகத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தார். அப்போது அவர், திடீரென தப்பியோடிவிட்டார்.
நேற்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தப்பியோடிய செந்தில் குமாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிப்பதற்கு முன்பாகவே குழந்தைக்கு பால் வாங்கி வருவதாகக் கூறி குற்றவாளி செந்தில்குமார் தப்பியோடினார். துப்பியோடிய அவரை செல்வபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான 3 தனிப்படை போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்.