கூட்டணி ஆட்சியா... அதிமுக ஆட்சியா.. எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் - செல்லூர் ராஜூ
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை அச்சம்பத்து மந்தை திடலில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...
விமான விபத்தால் இந்திய மக்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அனைத்து மக்களின் உள்ளங்களில் பாதிப்பு உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய விபத்து நடந்துள்ளது. இரங்கல் தெரிவிக்கிறோம் என்றவரிடம் அதிமுக ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்....
கூட்டணி ஆட்சி குறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்:
கூட்டணி ஆட்சியா, அதிமுக ஆட்சியா என்பது குறித்தெல்லாம் எங்கள் பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார். ஆட்சி குறித்து ஏற்கனவே எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுத்துவிட்டார். கூட்டணி ஆட்சியா என்பது குறித்தெல்லாம் பொதுச் செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அவர் இப்படிச் சொன்னார் இவர் அப்படிச் சொன்னார் என குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஆட்சி அமைப்பது குறித்தும் கூட்டணி குறித்தும் அமித்ஷா பேசியது குறித்தும் எங்கள் பொதுச் செயலாளர் ஏற்கனவே தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்.
மக்களே வருத்தப்படும் அளவிற்கு தரக்குறைவாக முதலமைச்சர் பேசுகிறார்:
முன்னாள் முதலமைச்சரை எதிர்க்கட்சி தலைவரை காது கூசும் அளவிற்கு மக்களே வருத்தப்படும் அளவிற்கு தரக்குறைவாக முதலமைச்சர் பேசுகிறார். முதலமைச்சரின் பேச்சை பார்த்து ஒரு முதல்வரா இப்படி பேசுகிறார் என மக்கள் நினைக்கிறார்கள்.. ஒரு நாலாந்தர பேச்சாளர் போல முதல்வர் பேசி வருகிறார். இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளனர். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் நினைக்கின்றனர். படிக்கச் செல்லும் பெண்கள் உட்பட வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை எல்லோருமே பயந்து போயிருக்கின்றனர். இதில், இன்னொரு முறை திமுக ஆட்சி அமையும் என முதல்வர் பேசுகிறார்.
ஜல்லிக்கட்டு அரங்கத்தால் மதுரை மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது:
திமுக ஆட்சியில் மந்திரிகளுக்கு வேறு வேலை இல்லை. சாலைக்கு பூமிபூஜை மட்டுமே போடுகின்றனர். ஒரு கலைஞர் நூலகத்தை கொண்டு வந்ததை மட்டுமே பேசுகின்றனர். ஜல்லிக்கட்டு அரங்கத்தால் மதுரை மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது. வேறு எதையும் கொண்டு வரவில்லை. 1000 ரூபாய் மகளிர்க்கு கொடுப்பதை பெரிதாக பேசுகின்றனர். எங்கள் திட்டங்கள் குறிப்பாக மகளிர்க்காக அதிமுக கொடுத்த திட்டங்கள் பலவற்றையும் நிறுத்திவிட்டார்கள்.
அரசியல் கருத்துக்களை யாரும் சொல்ல வேண்டாம் என பொதுச் செயலாளர் கூறிவிட்டார். அரசியல் கருத்துக்களை நான் பேசுகிறேன் என பொதுச் செயலாளர் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் அப்போது அனைத்தும் சரிசெய்யப்படும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.