முதல்வர் விஜயின் முகாம் அலுவலகமாகிய பாமணி இல்லம்.. சிறப்புகள் என்ன?
காவிரிப் படுகையின் முக்கிய நகரமான மன்னார்குடியின் தலைப்பகுதியாக அமைந்த தொன்மைமிக்க ஊர் பாமணி. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பும், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பாடப்பெற்ற புகழும் கொண்ட இவ்வூரின் பெயரிலேயே இங்கு பாயும் காவிரியின் கிளையாறும் 'பாமணியாறு' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி ஒருகாலத்தில், அடர்ந்த காடாகவும் பாம்புகள் நிறைந்த பகுதியாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. பாம்பு அச்சத்திலிருந்து விடுபட இவ்வூர் மக்கள் நாகத்தைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினர் என்பது ஐதிகம்.
அதன் தொடர்ச்சியாக பிற்காலத்தில் இங்கு அமைந்த ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில் இன்றளவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலாகத் திகழ்கிறது. சிவபெருமான் நாகத்தை ஆபரணமாக அணிந்திருப்பதால் அவருக்கு 'பாம்பணி சிவன்' என்ற திருநாமமும் உண்டு. இத்தலத்து சிவனைக் குறிக்கும் 'பாம்பணி' என்னும் தொன்மையான ஊரின் பெயரே மருவி, காலப்போக்கில் ’பாமணி’ என்றானது.
ஊரின் இந்தப் பெயரே இங்கு பாயும் ஆற்றுக்கும் சூட்டப்பட்டது. இக்கோயிலில் சோழ மன்னன் ராஜராஜன் மற்றும் புகழ்பெற்ற பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள் உட்படப் பல வரலாற்று ஆதாரங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் மற்றும் பிரிட்டிஷார் எனப் பல்வேறு ஆட்சியாளர்களால் சிறப்புற நிர்வகிக்கப்பட்ட பிராந்தியம் இது. பாமணியாறு மன்னார்குடியிலிருந்து 13 கிலோ மீட்டருக்கு முன்னதாக நீடாமங்கலம் அருகில் உள்ள‘மூணாற்றுத் தலைப்பு’ என்னும் இடத்தில் வெண்ணாற்றிலிருந்து பிரிகிறது.
அங்கிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து முத்துப்பேட்டையில் வங்கக்கடலில் கலக்கிறது. அந்த ஆறு போகும் வழியெல்லாம் பாடல் பெற்ற ஸ்தலங்கள் பல உள்ளன. அது மட்டுமல்லாமல் பழமையான கிறிஸ்தவ தேவாலயங்கள், தர்காக்கள் என்று பாமணியாற்றின் நீர் ஒருங்கிணைந்த தஞ்சைப் பிராந்தியத்தில் பன்மைத்துவம் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாமணியாறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள அலையாத்திக் காடு தமிழ்நாட்டின் முக்கியமான சூழலியல் மண்டலங்களுள் ஒன்று ஆகும்.

