\
பாமணி
பாமணி இல்லம்pt web

முதலமைச்சர் விஜய்க்காக தயாராகும் 'வெற்றி வீடு'? முகாம் அலுவலகத்திற்கு அரசு புது பரிசீலனை

முதலமைச்சர் விஜய்க்காக தயாராகும் பாமணி இல்லம்; "வெற்றி வீடு" என பெயர் மாற்றம் செய்யவும் திட்டம்..
Published on: 

செய்தியாளர் ரமேஷ்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பாமணி இல்லத்தை, முதலமைச்சர் விஜயின் முகாம் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு பல கிலோமீட்டர் பயணம் செய்து வருவதால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள இடத்தை அதிகாரப்பூர்வ முகாம் இல்லமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சருக்கு ஏற்கனவே ஒரு இல்லம் உள்ள நிலையில், அதிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த பாமணி இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாமணி இல்லத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தங்கியிருந்தனர். இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் விஜய் இந்த இல்லத்தை நேரில் பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த இல்லம் அமைந்துள்ள பகுதியில் அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் வினோத் உள்ளிட்டோரின் இல்லங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், முதலமைச்சர் இந்த இல்லத்தில் குடியேறிய பிறகு, "பாமணி இல்லம்" என்ற பெயரை "வெற்றி வீடு" என்று மாற்ற தமிழக அரசின் பொதுப்பணித்துறை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com