கேரளாவைக் குறிவைக்கும் விஜய்.. தவெக தலைவராகும் நடிகர்? கைகொடுக்குமா மாஸ்டர் பிளான்?
தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கி சிறிது காலத்திலேயே தமிழக மக்களின் பேராதரவால் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருக்கிறார். இந்நிலையில், மாநிலம் தாண்டி தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வில் தீவிரம் காட்டி வரும் தவெக, தற்போது நடிகர் தேவனை கேரள தவெக மாநிலத் தலைவராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த நடிகர் தேவன், மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். பல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘பாட்ஷா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானவர்.
திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் கால்பதித்த நடிகர் தேவன், பாஜகவில் இணைந்து, அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகவும் உயர்ந்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு, தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி பாஜகவில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து, தேவனை தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது கேரள அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் தேவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நான் பாஜகவில் இருந்து விலகியதை அறிந்து, தவெகவின் மூத்த நிர்வாகிகள் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். நான் தவெகவில் இணைந்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்தனர். அவர்களும் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். எனது தரப்பிலும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இருதரப்புக்கும் இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டது. ஆனால், நான் முதல்வர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறினேன். அதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். செப்டம்பர் 10-ஆம் தேதி முதல்வர் விஜயை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் விஜயை சந்திக்கும்போது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படும். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தவெகவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயம் கேரள அரசியலிலும் மாற்றங்கள் நிகழும்” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிதான் கேரளாவில் தற்போது ஆளும் கட்சியாக உள்ளது. இத்தகைய சூழலில், கேரளாவில் தேவனை மாநிலத் தலைவர் பதவியில் அமரவைப்பதை கேரள காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தமிழகத்தைத் தாண்டி அண்டை மாநிலங்களிலும் தவெக கால்பதிப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார். ர

