”எல்லோரும் போய்ட்டாங்க..” - அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பிய விஜய்.. பேரவையில் எழுந்த சிரிப்பொலி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பாக, குட்டிக்கதை ஒன்றைச் சொல்லி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினையும் கொளத்தூர் தொகுதியையும் விமர்சித்திருந்தார். இதற்கிடையே முதல்வரின் உரையால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்தனர். அப்போது அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பிய முதல்வர் விஜய், “எல்லோரும் போய்ட்டாங்க.. பேசலாமா” என்றார். அதற்கு அவைத் தலைவர், “நீங்கள் உங்கள் கருத்துகளை மனநிறைவோடு பேசலாம்” என்றார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. ’பேசு.. பேசுனா..’ அப்புறம் என்னா பண்றது” என்றதும், அவையில் சிரிப்பொலியுடன் மேஜை தட்டலும் எழுந்து அடங்கியது.

