யார் இந்த வால்டர் ஒயிட்? முதல்வர் விஜயை தாக்குவது ஏன்? ஆயுதமாக்கும் எதிர்கட்சியினர்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
நாகை மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாக பூபாலன் என்பவரை, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அன்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 134 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழக வெற்றிக் கழகம் Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party-யும் தான். சொந்த கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாபியாவை வைத்துக் கொண்டு, ஊருக்கு உபதேசம் செய்கிறார் முதலமைச்சர் விஜய் என்று விமர்சித்திருந்தார். இதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், தனது கட்சிக் காரரின் Walter White Behaviour குறித்து, முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல், மவுன சாமியார் போல் இருக்கிறார் என்று விமர்சித்தார். மு.க.ஸ்டாலினும் சரி, எடப்பாடி பழனிசாமியும் சரி, பிரேக்கிங் பேட் சீரிஸையும், அதில் இடம்பெற்றுள்ள வால்டர் ஒயிட் கதாபாத்திரத்தையும், முன்னிலைப்படுத்தி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில், இந்த வால்டர் ஒயிட் கதாபத்திரத்தின் குணாதிசயம் என்ன என்று தேடி எடுத்து, இணையத்தில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது, வெளியில் சாதாரணமான நபராக தோன்றினாலும், ரகசியமாக பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள், தனது புத்திசாலித்தனமான, சூழ்ச்சி நிறைந்த பேச்சுத் திறமையால், மற்றவர்களை தன்வழிக்கு கொண்டு வருவது போன்றவை, வால்டர் ஒயிட் கதாபாத்திரத்தின் தன்மைகள். மேலும், தவறான முடிவுகளை நியாயப்படுத்த முயற்சி செய்வார்கள்.
தனது செயல்கள் குடும்பத்துக்காக தான் அல்லது சூழ்நிலையால் செய்துவிட்டேன் என்று கூறி, தனக்குத் தானே சமாதானம் செய்துக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் அதற்கு பின்னால் ஒரு அதிகார வெறி இருக்கும். இந்த பண்புகளை கொண்ட நபர்களை தான், வால்டர் ஒயிட் என்ற பெயரை சொல்லி விமர்சிக்கிறார்கள். இந்த உருவகத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் விஜயையும், அவரது கட்சியையும், கட்சி நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

