இடைநிற்றல் மாணவர்களை சந்தித்த விருதுநகர் ஆட்சியர்.. மக்களுக்கு முதலமைச்சர் வைத்த வேண்டுகோள்...
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை நிறைவு செய்வதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இடைநிற்றல் ஆன மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, விருதுநகர் ஊராட்சி - நகராட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் இடைநிற்றல் ஆன 5 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார். இக்கள ஆய்வில் 5 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்த காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேருவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், அலுவலர்கள் மூலம் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
அதோடு, புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கி அவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வீடியோவை குறிப்பிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “ கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு அன்பில் மகேஷ், @tnschoolsedu அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
காலை உணவுத் திட்டம், SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.