"பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!" - அதிமுக குறித்து முதல்வர் மீண்டும் விமர்சனம்!
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி என்றும், முழு பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் பகிர்ந்த வீடியோவை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ள முதலமைச்சர், அதிமுக ஆதரவில் நிறைவேறிய சட்டத்திருத்த மசோதாதான், டங்க்ஸ்டன் சுரங்க ஏல அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்க காரணமானது என தெரிவித்துள்ளார்.
திமுக அந்த மசோதாவை எதிர்த்ததையும், அதிமுக மசோதாவை ஆதரித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுகவின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகியிருப்பதாக விமர்சித்துள்ள முதல்வர், எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு இங்கே நாடகமாடுவது எடுபடாது என்றும், தம்பிதுரை எந்த திருத்தத்தை ஆதரித்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில உரிமைகளைப் பறித்து ஒன்றிய அரசுக்கு வழங்குவதை அதிமுக ஆதரிப்பது பச்சைத் துரோகம் இல்லையா? எனக் கேட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.