மக்கள் நலன் காக்கும் திமுக அரசின் மகத்தான வெற்றி! டங்ஸ்டன் திட்டம் ரத்து குறித்து முதல்வர் கடிதம்
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி:
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் அப்பகுதி மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.
ஆரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சரங்கம் வர நீ தான் காரணம். இல்லை இல்லை நீ தான் காரணம் என அரசியல் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குறைகூறி வந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரிட்டாபட்டி மக்கள் கடும் எதிர்ப்பு:
இதையடுத்து அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நான் உள்ள வரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து அப்பகுதிகள் மக்கள் மாபெரும் அமைதிப் பேரணியை நடத்திக் காட்டினர். இதையடுத்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும். அதை மத்திய அமைச்சர் நேரடியாக உங்களை சந்தித்து அறிவிப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம்:
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் டெல்லியில் மத்திய அமைச்சரை அண்ணாமலை சந்தித்தார். அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்ற நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட நாங்கள் செய்த போராட்டமே காரணம் என அரசியல் கட்சியினரும் உரிமை கொண்டாடினர். இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி நேரடியாக அரிட்டாபட்டிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களது போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.
இந்நிலையில், அரிட்டாபட்டி கிராம மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:
தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசு. வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டது. அப்போது, அதனைத் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எதிர்த்து நின்றது திராவிட முன்னேற்றக் கழகம்.
மதுரையில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை நாடாளுமன்ற விவாதங்களில் உறுதியான குரலில் எதிரொலித்தனர். சட்டமன்றத்திலும் இதற்கான தீர்மானத்தை மக்களின் குரலாக ஒலித்தேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமின்றி நம் தோழமைக் கட்சியினர், மாற்றுக் கட்சியினர் ஆகியோருடன் எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆதரிக்கின்ற அளவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்;தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய அரசு:
இதையடுத்து டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பும் வெளியானது. அரசின் உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஜனவரி 26 அன்று மதுரைக்கு புறப்பட்டேன். அரிட்டாபட்டியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு மாபெரும் வரவேற்பு அளித்தனர். பாராட்டுகளைக் குவித்தனர். அவர்களிடம் உரையாற்றிய நான், இது என்னுடைய அரசின் வெற்றியல்ல. நம்முடைய அரசின் வெற்றி என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.
7வது முறையாக திமுக ஆட்சியமைக்கும்:
டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம ஏலங்கள் தொடர்பான அ.தி.மு.க. உறுப்பினர் தன்னுடைய கருத்தை பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தெரிவித்து இருந்தபோதும், சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரித்ததையும் மற்ற கட்சிகள் ஆதரித்ததையும் மனதாரப் பாராட்டி, இது தமிழ்நாட்டின் வெற்றி என்பதை அரிட்டாபட்டி மக்களிடம் தெரிவித்தேன். மக்களின் உரிமைக்காக இன்றும் துணை நிற்கின்ற மாபெரும் இயக்கம்தான் திமுக. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. ஏழாவது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.