பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3,000.. முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2009 ஆண்டு முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் பரிசுத் தொகுப்புடன், பொங்கல் பரித்தொகையாக 100 ரூபாய் அளிக்கும் திட்டத்தை 2014ஆம் ஆண்டு தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, பரிசுத் தொகை வழங்கும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் விட்டுவிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சாராக இருந்தபோது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அந்த சமயத்தில், எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையாக 1000 ரூபாய் வழங்கியது. தொடர்ந்து, 2024 ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக 1000 ரூபாய் பொங்கல் பரிசுத்தொகை வழங்கியது. அதன்பின்னர், சென்ற ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை; பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கு, எதிர்க்கட்சிகள் சார்பில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தான், சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் இந்தாண்டில், பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்புடன், 3000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2.23 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன் 3,000 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், இதன்மூலம் அரசுக்கு 6,936 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, 1 முழு கரும்பு, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று 3,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

