மொழிப்போர் தளபதி.. மறைந்தார் எல். கணேசன்.. யார் இவர்..? முழு விவரம்!
மொழிப்போர் தீரர் எல். கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுகவின் முன்னாள் எம்.பி. எல். கணேசன், தஞ்சை மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, திமுகவில் முக்கிய பங்காற்றியவர். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.
திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் திமுக எம்.பி-யுமான எல். கணேசன் தனது 92-வது வயதில் உடல் மூப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என் நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். தொடர்ந்து, எல்.கணேசனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், மொழிப்போர் தீரர் எல். கணேசன் சிறப்புகள் குறித்துப் பார்க்கலாம்.
திமுகவில் பேச்சுக்கு இணையாக எழுத்தையும் ஆயுதமாகக் கொண்டவர்களில் ஒருவர் எல்.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் எல். கணேசன். தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில், சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த கணேசன் சட்டம் பயின்றவர். கல்லூரிக் காலத்தில் கம்யூனிஸ்ட் சித்தாத்தங்களில் ஈடுபாடு காட்டிய இவர், அண்ணாவின் எழுத்துகளாலும் கொள்கையாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார்.
அதன்பின்னர் சுதந்திர இந்தியாவை அதிரவைத்த இந்திக்கு எதிரான மாணவப் போராட்ட வரலாற்றில், கணேசனின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. மாணவர்களுக்கும் திமுகவுக்கும் இடையே பாலமாகவும், போராட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார். அண்ணாவைத் தலைவராகவும் திராவிட சித்தாந்தத்தைக் கொள்கையாகவும் ஏற்றுக்கொண்ட மாணவர்கள் கட்சிக்கு வெளியே இருந்தார்கள். அவர்களை திமுகவுடன் இணைக்கும் பாலமாக கணேசன் விளங்கினார்.
தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக 1938, 1948, 1950, 1963 என இந்த நான்கு போராட்டங்களிலும், அண்ணா முக்கியப் பங்காற்றியதோடு, தலைமையும் வகித்துள்ளார். அப்போது மாணவர்கள் விபரீதமாக வன்முறையில் ஏதும் ஈடுபடக் கூடாது என்பதே அண்ணாவின் எண்ணமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் எல். கணேசன் போன்றவர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
1962இல் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது, ‘அகில இந்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு’ என்ற பெயரில் அமைப்பு தொடங்கிப் போராடிய எல்.கணேசன், 1965இல் இரண்டாவது பொறுப்புக்கு நகர்ந்தார். அதாவது, இந்தப் போராட்டத்தை மாணவர் திமுக செயலாளராக ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அப்போது ‘தமிழ் மொழி காக்கப்பட இந்தித் திணிப்பை எதிர்ப்பது முக்கியம்; அதேநேரம் மாணவர்கள் வன்முறையை நோக்கிச் சென்றுவிடக் கூடாது’ என்ற அண்ணாவின் எண்ணங்களை, களத்தில் இருந்த மாணவர்களுக்கு தீவிரமாக வலியுறுத்தியதில் எல்.கணேசன் முக்கியப் பங்காற்றினார்.
1965இல் நடந்த போராட்டத்தைத் தொடர்வதையே மாணவர்களும் விரும்பினார்கள். அப்போது அண்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தபோது, எல்.கணேசன் மாணவர்கள் பக்கமே நிற்பது என முடிவெடுத்தார். ஆனால், ராணுவம் வந்திறங்கிய பின் மாணவர்கள் கொடிய தாக்குதலுக்கு உள்ளானதை கண்டு, அண்ணா சொன்ன முடிவையே எடுக்கும் சூழலுக்கு எல்.கணேசன் நகர்ந்தார். அதன்பின்னர், திமுகவில் தீவிரமாக இயங்கிய அவர், அண்ணாவின் தலைமையிலான திமுக ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தார். அண்ணாவைத் தனது ஆசிரியராக ஏற்றுக்கொண்ட எல்.கணேசன், இந்திய வரலாற்றில் அண்ணா அளவுக்கு அரசியல்களம் நோக்கி மாணவர்களை இழுத்துவந்த தலைவர் யாரும் கிடையாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.

