“பெரும் பிரச்னைகளை தீர்த்துதான் திறந்துள்ளோம்” - கிளாம்பாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

“கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்னைகள் இல்லை எனும் பெரும் பிரச்சனைகளை தீர்த்துவைத்துதான் திறந்துவைத்துள்ளோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்
சட்டமன்றத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்pt web

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ எழுப்பி இருந்த கேள்விக்கு திமுக அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு போன்றோரெல்லாம் பதில் அளித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கேள்வியை முடித்து வைத்துள்ளார். அந்த உரையாடலை இங்கே காணலாம்..

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துள்ளீர்கள். அங்கிருந்து சென்னைக்குள் வருவதற்கு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்”

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்: “கிளாம்பாக்கத்தை தேர்ந்தெடுத்தது உங்களது ஆட்சியில்தான். 30%ல் நீங்கள் விட்டுச்சென்ற பணியை முதல்வர் பார்த்து பார்த்து செய்துகொண்டுள்ளார். பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டிற்கு பேருந்து நிலையத்தை மாற்றும்போது இதேபோல் பிரச்சனை வந்தது. அப்போது இதேபோல் செய்திகள் வந்தன. தற்போது மக்கள் எல்லோரும் பேருந்து நிலையத்தை ஏற்றுக்கொண்டு பயணம் செய்துகொண்டுள்ளனர். பேருந்தில் பயணிக்கும் யாரும் அதிகுறித்து பிரச்னை எழுப்பவில்லை”

அமைச்சர் சேகர்பாபு: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை நேற்றைய எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதில்சொல்ல வேண்டும் என்றால் பயணிகள் யாரும் கழிப்பறை இல்லை என்றோ, குடிநீர் வசதி இல்லையென்றோ, உணவு இல்லையென்றோ, குழந்தைகளுக்கு பால் இல்லையென்றோ புகார் சொல்லவில்லை. இரவில் 12 மணிக்கு மேல் 4 மணிக்குள் பேருந்துகள் இல்லை என்பதால் சில ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிற பிரச்னையே தவிர பேருந்து நிலையம் 100% பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது”

அமைச்சர் சேகர்பாபு - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
அமைச்சர் சேகர்பாபு - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: “நாங்கள் வெளியிட்ட அறிக்கையை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அங்கிருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றுதான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். சிறு சிறு பிரச்சனைகளை தீர்த்து முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்றுதான் தெரிவித்திருந்தேன்”

முதல்வர் மு.க.ஸ்டாலின்: “எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல் சிறு சிறு பிரச்சனைகள் மட்டுமல்ல. பெரும் பெரும் பிரச்சனைகளும் இருந்தன. அதை தீர்த்து வைத்துவிட்டுத்தான் திறந்துவைத்துள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் சேகர்பாபுவும், ‘இன்னும் பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், நீங்கள் சொல்லும் குறைகளையும் தீர்த்துவைக்கின்றோம்’ என்றுதான் சொல்லியுள்ளார். எனவே இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com