தென்மாவட்டங்களில் கடுமையான பாதிப்புக்கு ரூ.6000; லேசான பாதிப்புக்கு ரூ.1000 - முதல்வர் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்று தனித்தனியாக நிவாரணத்தொகைகளை அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்புதியதலைமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தனித்தீவுகளாக காட்சியளித்தன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அனுப்பப்பட்டு மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில், முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு சென்று பாதிப்புகளை பார்வையிட்ட அவர், மீட்புப்பணிகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு, “மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் 4 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும். மழையால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 17,000 ரூபாய் வழங்கப்படும். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பின், ஹெக்டர் ஒன்றுக்கு 22,000 ரூபாய் வழங்கப்படும்.

அதேபோல் மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 8,500 ரூபாய் வழங்கப்படும். எருது மற்றும் பசு உள்ளிட்ட கால்நடை உயிரிழப்புகளுக்கு 37,500 ரூபாய் வழங்கப்படும், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மேலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். தூத்துக்குடி, நெல்லையில் லேசாக பாதிக்க வட்டங்களுக்கும் அத்தோடு, குமரி மற்றும் தென்காசியில் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com