ஆசிரியர் மிரட்டியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், சபரி கண்ணன் என்ற மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற விழாவின்போது, மாணவர் சபரி தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும், அவரை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் 7ஆம் தேதி பெற்றோருடன் பள்ளிக்கு வருமாறு சபரியிடம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்காத மாணவர் சபரி, பள்ளியில் விஷம் குடித்துள்ளார். வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த நிலையில் அவரை பள்ளி நிர்வாகத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த மாணவரின் பெற்றோர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சில நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் சபரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், வீரவநல்லூர் காவல் நிலையத்தின் முன் மாணவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவரின் உறவினர்கள்தான் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக தகவல் வௌியான நிலையில், பள்ளி நிர்வாகமே பேருந்துகளுக்கு தீ வைத்துவிட்டு, வழக்கை திசை திருப்ப முயல்வதாக மாணவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.