“திமுக வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சாதிய பிரச்னைகள் அதிகரிப்பு"- அண்ணாமலை

”ஒரு படம் சமுதாயத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அதிகப்படியான இமேஜை உருவாக்கும்போது அதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்” அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 21-ஆம் நாளான இன்று பாளையங்கோட்டையில் அமைந்துள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின், அண்ணாமலை
ஸ்டாலின், அண்ணாமலைபுதிய தலைமுறை

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அரசியலில் திமுக தலைவர்கள் குறிப்பாக அவர்கள் சொல்லும் பொய்களை நாம் தோலுரித்துக் காட்டும்போது அதை அவதூறாக பார்க்கிறார்கள். ராமநாதபுரத்தில் பிரதமர் குறித்து முதலமைச்சர் பேசியது அவதூறு இல்லையா? பிரதமரைப் பற்றி மனோதங்கராஜ் புகைப்படம் போட்டு பேசியது அவதூறு இல்லையா? முதலில் மனோதங்கராஜை கைது செய்து உள்ளே போடுங்கள். அதன்பின் என்மீது வழக்கு போடுங்கள்.

இந்தியாவில் எங்கும் நீட்டிற்கான தற்கொலை நடக்காதபோது தமிழ்நாட்டில் மட்டும் அதிலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்ததில் இருந்து நடக்கிறதென்றால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முதல் குற்றவாளியாக முதலமைச்சரும் இரண்டாவது குற்றவாளியாக உதயநிதி ஸ்டாலினையும்தான் சேர்க்க வேண்டும். நீட்டில் டாப் 10 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து 4 மாணவர்கள் வந்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது நீட் யாருக்கு எதிரானது.

அண்ணாமலை
அண்ணாமலை

தென் தமிழகம் வேலைவாய்ப்பின்மை அதிகமாக காணப்படும் இடமாக இருக்கிறது. தொழிற் நிறுவனங்கள் சென்னையை சுத்தி இருப்பதை விட்டுவிட்டு, தொழிற் நிறுவனங்களை அரசு தென் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும். அப்படியானால்தான் இம்மாதிரியான பிரச்னைகள் எல்லாம் தானாக சரியாகிவிடும்.

தமிழகத்தில் சாதிய பிரச்னைகள் அதிகமானது எப்போதென்றால் அது திமுக வந்த பிறகு தான். சாதிப்படங்களை எடுக்கிறார்கள். இவர்களே தயாரிக்கிறார்கள். சாதியில்லை என்று சொல்லிவிட்டு, சாதி ரீதியிலான படங்களை ஏன் எடுக்க வேண்டும். ஒரு படம் சமுதாயத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அதிகப்படியான இமேஜை உருவாக்கும்போது அதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இவையெல்லாம் அதன் வெளிப்பாடுதான்” என்றார். முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com