model image
model imagefreepik

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 34 ஆயிரம் சிறுமிகள் கருத்தரிப்பு... அதிரும் ரிப்போர்ட்

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கருத்தரித்துள்ளது குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு சான்றாகப் பார்க்கப்படுகிறது.
Published on

செய்தியாளர் மதுரை பிரசன்னா

அதிகரிக்கிறதா குழந்தைத் திருமணங்கள்?

சமூக நலத்துறையின் தகவலின்படி, 2021ஆம் ஆண்டில் 2,638 குழந்தைத் திருமணங்கள், 2022இல் 2,401, 2023இல் 1,961, மற்றும் 2024ல் 2347 திருமண முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் சமீபத்திய அரசு புள்ளிவிவரங்களின் படி, மதுரை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3,085 சிறுமிகள், அதாவது 18 வயதுக்கு கீழான இளம் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர். இது குழந்தைத் திருமணங்கள் இன்னும் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதிற்கு கீழான 34,497 இளம் பெண்கள் கருத்தரித்துள்ளனர். இது தமிழ்நாடு முழுவதிலுமே பரவலாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூக சூழலை வெளிக்கொண்டு வருகிறது.

சமூக நலத்துறையின் தகவலின்படி, 2021ஆம் ஆண்டில் 2,638 குழந்தைத் திருமணங்கள், 2022இல் 2,401, 2023இல் 1,961, மற்றும் 2024ல் 2347 திருமண முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பெற்றோரிடம் 18 வயதிற்கு முன் திருமணம் செய்ய மாட்டோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி வாங்கி, சிறுமிகளை வீடு திரும்ப அனுப்புகிறார்கள்.

பல பெற்றோர்கள், சிறுமி வேறு சமுதாயத்தை சேர்ந்த நபரை காதலித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், முன்பே திருமணத்தை நடத்துவதாகவும் ஒரு பார்வை இருக்கிறது. சில நேரங்களில் பெற்றோர் இல்லாமல் தாத்தா, பாட்டி போன்றோரால் வளர்க்கப்படும் சிறுமிகளும் பாதுகாப்பின்றி திருமணத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

model image
இஸ்ரேல் - ஈரான்: ஒரு போர் அல்ல.... மொத்தம் மூன்று போர்.. எப்படி?

சட்டத்தை முழுமையாகவும் கடுமையாகவும் பயன்படுத்த வேண்டும்

சட்டப்படி, 18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்து வைத்தால், அந்த நபருக்கும், திருமணத்தை ஏற்பாடு செய்தவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆனால் நடைமுறையில் இந்தச் சட்டம் பல இடங்களில் கடுமையாக அமல்படுத்தப்படவில்லை என குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் சிறுமிகள் கர்ப்பமாகும் அளவு உயர்ந்திருக்கிறது என்றால், அது குழந்தைத் திருமணங்கள் எளிதாக நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதற்கே சாட்சி. அரசு தரவுகளை வெளிப்படையாக பகிர வேண்டும். மேலும், குழந்தைத் திருமணங்களை முற்றிலும் ஒழிக்க சட்டத்தை முழுமையாகவும் கடுமையாகவும் பயன்படுத்த வேண்டிய அவசியம் மிக அதிகம் உள்ளது என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

வெரோனிகா மேரி
வெரோனிகா மேரி

சமூக செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,000க்கும் மேற்பட்ட 18 வயதுக்கு குறைவான சிறார்களின் பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை, பள்ளிகளில் ஆலோசனைகள் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், அந்த உத்தரவைத் தொடர்ந்தும் சிறார் பிரசவங்கள் நடைபெற்று வருவது கவலைக்கிடமானது.

model image
’ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் உருவாகும்’ ~ அமித் ஷாவின் பேச்சும் எதிர்வினையும்..!

எந்த நடவடிக்கையும் இல்லை

ஒரு ஒன்றியத்தில் 5 சிறார் பிரசவம் நடந்தாலே சிவப்பு எச்சரிக்கை நிலையாக அமையவேண்டும். ஆனால் பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட சிறார் பிரசவங்கள் நடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சுகாதாரத்துறை, காவல்துறை, சமூக நலத்துறை ஆகியவை ஒருவர்மேல் ஒருவர் பொறுப்பைத் தள்ளி வருகின்றனர். தகவல் கிடைக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கின்றனர். ஒரு ஒன்றியத்தில் 5 சிறார் பிரசவம் நடந்தாலே சிவப்பு எச்சரிக்கை நிலையாக அமையவேண்டும். ஆனால் பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட சிறார் பிரசவங்கள் நடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், ஊடகங்கள், சமூக அமைப்புகள் தொடர்ந்து போராடினாலும், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் காணாமல் போய்வருவது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவிக்கிறார்.

செல்வ கோமதி
செல்வ கோமதி

சமூக செயற்பாட்டாளர் செல்வ கோமதி கூறுகையில், “தமிழகத்தில் 2014 முதல் இளம் சிறார்களால் பிரசவம் செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன நலனை தீவிரமாக பாதிக்கிறது. சிறுமிகள் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதில் சாதி கட்டமைப்பு கிராமப்புறங்களில் முக்கிய காரணமாக உள்ளது. வேறுசாதியில் திருமணம் நடைபெறும் அச்சத்தில் பெற்றோர் விரைவாக திருமணம் செய்து வைக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போவதற்கான காரணங்களை கல்வித்துறை முறையாக ஆய்வு செய்யவில்லை. பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றாலும் அதற்கான தகவல்கள் பிற துறைகளுக்கு சரிவர பகிரப்படவில்லை. இந்த பிரச்சனையை சமாளிக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கிறார்.

20% வழக்குகள் மட்டுமே பதிவு

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தராஜ் கூறுகையில், “சிறார் திருமணங்களில் நிர்வாக சீர்கேடு பெரிதும் காணப்படுகிறது. சுகாதாரத் துறை, 18 வயதுக்கு கீழ் பிரசவமாகும் சிறார்களின் விவரங்களை முறையாக பகிர மறுப்பதால், கணக்கீடு மற்றும் கண்காணிப்பு தடைபட்டுள்ளது. 80% சிறார் திருமணங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; 20% வழக்குகள் மட்டுமே காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறார் பிரசவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரியிடம் கேட்கும் பொழுது, “சுகாதாரத்துறை மூலம் இளம் சிறார்கள் பிரசவம் குறித்து தகவல்கள் சமூக நலத்துறைக்கு வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், இளம் சிறார்களின் பிரசவ விவரங்களை தொடர்ச்சியாக அளிக்கும்படி சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரியிடம் கேட்கும் பொழுது பதில் அளிக்கவில்லை... இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்க முயற்சிக்கும் பொழுது பதில் அளிக்கவில்லை...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com