vijay, udhayanidhi stalin
vijay, udhayanidhi stalinpt

“2006-ல் 234 தொகுதிகளிலும் வென்று ஆட்சியமைத்த திமுக..” - விமர்சித்த முதல்வர் விஜய்

விஜய் தலைமையிலான தவெக அரசு மீது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடந்தது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பான்மை இல்லாத அரசு என தவெகவை விமர்சித்திருந்தார்.
Published on
Summary

தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் சிலர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததால், 108 இடங்களுடன் இருந்த விஜயின் கட்சி ஆட்சியமைத்தது. நம்பிக்கை தீர்மானத்தில் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. உதயநிதி, தவெக ஆட்சிக்கு மக்கள் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றார். அதற்கு விஜய், 2006 திமுக ஆட்சியை நினைவுபடுத்தி, திமுகவின் வாக்கு சதவிகிதம் 24.19 மட்டுமே எனக் கூறி விமர்சித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டது. தனிப்பெரும் கட்சியாக விஜயின் தமிழக வெற்றிகழகம் 108 இடங்களில் வென்ற நிலையில் அந்த கட்சி ஆட்சியமைப்பதற்கான வேலைகளை தொடங்கியது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவு அளித்தது.

தொடர்ந்து தவெக சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்ட நிலையில், பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் CPI,CPM, விசிக, IUML ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தை வழங்கின.

சட்டப்பேரவையில் விஜய்
சட்டப்பேரவையில் விஜய்Pt web

அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மற்றும் அவரின் அமைச்சரவைக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிராமணம் செய்துவைத்தார். அதே நேரம் மே 13-ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்த நிலையில், இறுதியாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

தவெகவை விமர்சித்த உதயநிதி..

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக ஆட்சியமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 1.72 கோடி வாக்காளர்கள் உங்களுக்கு வாக்களித்திருந்தாலும், 3.23 கோடி வாக்காளர்கள் உங்கள் கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது. 118 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கூட்டணியால் தான் ஆட்சி செய்ய முடியும், தவெகவுக்கு 108 இடங்களே கிடைத்தன.

பிளவுபட்ட அதிமுக கட்சியில் உள்ள ஒருபக்கத்தினரை புதிய முதல்வர் சந்திக்க செல்கிறார், புதுமையான ஆட்சி என்று கூறிவிட்டு தற்போது புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது. இந்திய வரலாற்றிலேயே பிளவுபட்ட கட்சியில் இருப்பவர் வேறு கட்சிக்கு செல்வதற்கு முன்பாகவே ஆதரவு தரவேண்டும் என போய் கேட்பது இதுதான் முதல்முறை. இதைப் பார்த்துவிட்டு Change Change-னு சொன்னீங்களே இதுக்குபின்னால் Exchange இருக்கிறதோ என மக்கள் சந்தேகப்படுகின்றனர்” என விமர்சித்திருந்தார்.

முதல்வர் விஜய் பதிலடி..

இந்தசூழலில் எதிர்கட்சித்தலைவர் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், “இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.

பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.

அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.

அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.

இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?

இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.

சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.

இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?” என பதிலடி கொடுத்துள்ளார்.

vijay, udhayanidhi stalin
சட்டமன்றத்தில் அசுர பலத்தில் தவெக| பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்.. TVK அரசை எதிர்த்தவர் யார்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com