கீழடி | முக மாதிரிகள்.. தமிழக முதல்வர் பெருமிதம்!
பழந்தமிழரின் வரலாற்றை விளக்கும் கீழடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு கிடைக்கப் பெற்ற விவரங்களைக் கொண்டு 982 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. இதில் கார்பன் டேட்டிங் சோதனை மூலம் கீழடியில் கிமு 200ஆம் ஆண்டில் மனித வாழ்க்கை இருந்தது தெரியவந்தது.
இந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு தொல்லியல் துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்தக் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது.
அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியது. இது, தமிழகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் விளக்கம் அளித்தார். எனினும், தொடர்ந்து தமிழக அரசும், தலைவர்களும் விமர்சித்தனர். இதற்கிடையே, கீழடியை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா மாற்றப்பட்டார். இதனால், இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், கீழடியில் கிடைக்கப் பெற்ற முக மாதிரிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை இப்போது கீழடியில். இங்குள்ள கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல்பூர்வமாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது. கீழடி பற்றிய இந்த விரிவான தகவலுக்கு @timesofindiaக்கு நன்றி” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு, “இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் கீழடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய மக்களின் முக அம்சங்களை மீண்டும் உருவாக்கி, தமிழ் கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்பதில் நான் மிகுந்த பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்.
மத்திய பாஜக அரசு தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வஞ்சகமாக நசுக்க முயன்றாலும், கீழடி அகழ்வாராய்ச்சியிலிருந்து வெளிவரும் ஆக்கபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் மத்திய அரசின் அநீதி மற்றும் மறுப்புகளைத் தொடர்ந்து முறியடித்து வருகின்றன. கீழடி ஆராய்ச்சி அறிக்கையை குறைந்தபட்சம் இப்போதாவது வெளியிடுமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன“ என அவர் தெரிவித்துள்ளார்.்