மதுரை | 11 ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர் மு.க.அழகிரியின் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்!
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (1.6 .2025) நடைபெறும் நிலையில் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்துவது என்பன போன்ற முக்கிய அம்சங்கள் பொதுக்குழுவில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள், மகளிருக்கு கூடுதல் வாய்ப்பளிக்க கட்சி தலைமை முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சகோதரர் மு.க. அழகிரியை நேரில் சந்தித்தார் பேசினார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க.அழகிரி இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று இரவு (31.5.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகிரி வீட்டில் இரவு உணவு உட்கொண்டு விட்டு, தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார். அதன்பிறகு மதுரையில் இந்த சந்திப்பு நடந்திருப்பது, திமுக அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.31.