“எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க தயார் ” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில் சென்னையிலுள்ள மழைக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதுதொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு ஆய்வு கூட்டங்களை நடத்தி, இங்கிருந்து ஐஏஎஸ் உட்பட பல மூத்த அதிகாரிகளை அங்கே அனுப்பி வைத்துள்ளோம். அவர்கள் மூலம் முன்னேற்பாடு பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.
பெரிய அளவிற்கு பாதிப்பு என்று இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.பேரிடர் நிதி குறித்து ஊடகத்தில் இருக்கக்கூடியவர்கள்தான் கொஞ்சம் தொடர்ந்து எழுதி அதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நீர் நிலைகளிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை மணி கொடுக்கப்படுகிறது. எல்லா பொதுமக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வேற இடத்துக்கு பாதுகாப்பாக முகாம்களை தங்க வைக்கப்படுகிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், ஒன்று சேர்ந்து அதை கடுமையாக எதிர்ப்போம்.” என்று தெரிவித்திருக்கிறார்.