சென்னையில் வீடுகள் விலை கிடுகிடு உயர்வு.. கோடிகளில் வீட்டு சந்தை!
சென்னையில் கட்டுமானப் பொருட்கள் விலை கடந்த மாதங்களில் 30% உயர்ந்து, தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்ததால் வீடுகளின் விலை 10–13% உயர்ந்துள்ளது. இருந்தாலும் வீட்டு விற்பனை 27% உயர்ந்துள்ளது. விலை மாற்றத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுப்படுத்தும் விதிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த அனுமதி அளிக்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக சென்னையில் வீடுகளின் விலை 13 சதவீதம் உயர்ந்துள்ள போதிலும் விற்பனை 27 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
கட்டுமான பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கூலியும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளின் விலை 10 முதல் 13 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே மாற்றம் செய்யும் வகையில் விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் என்று கட்டுமானத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுமானத் திட்டங்களுக்கு சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி என தனித்தனி அனுமதிகள் பெறுவதற்கு பதில் ஒருங்கிணைந்த அனுமதி அளிக்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சந்தைக்கு வரும் வேகம் குறைந்துள்ளது. 2025-ல் அதிக அளவில் புதிய திட்டங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. ஆனால், நடப்பாண்டில், புதிய திட்டங்களின் தொடக்கத்தை நிறுவனங்கள் மறுசீரமைத்து வருவதாக ஜேஎல்எல் எனும் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனம் கூறியுள்ளது. சென்னையில் நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை 8 ஆயிரத்து 587 வீடுகள் விற்பனையாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகமாகும்.

