”திட்டங்களில் முதல்வர் பெயர் எதற்கு?” - தடைவிதிக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய கருத்து!
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் இனியன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க. ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், இது சட்டவிதிக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை நீக்க உத்தரவிட கோரியும், ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட உள்ள மருத்துவத் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெயர் பயன்படுத்த தடை விதிக்கவும் மனுதாரர்கள் வலியுறுத்தினர்.
தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணையின்போது, அரசுத் திட்ட விளம்பரங்களில் முதலமைச்சர் படம் மட்டுமல்ல துறை அமைச்சர்களின் படங்களையும் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், வழக்கு குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் திமுக தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டது. அதேசமயம் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் தொடங்க தடை விதிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.