அதி கனமழை | சென்னைக்கு ரெட் அலர்ட்; செல்போன்களில் எச்சரிக்கை அலாரம்!!
தென்கிழக்குப் பருவமழை எல் நினோ காரணமாக குறைவான மழையையே கொடுத்திருந்தாலும், வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் அதி கனமழையை கொடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் இன்று சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர்ந்து, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல, அடுத்த 24 மணி நேரத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இந்தச்சூழலில் தான், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA), சென்னை மக்களுக்கு செல்போனில் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்தான குறுஞ்செய்தியில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

