\
கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கைfile photo

சென்னையில் மேகவெடிப்பு போல கொட்டிய மழை.. இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை முழுவதும் இரவு பரவலாக மழை வெளுத்துவாங்கியது. இந்தசூழலில் இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேகவெடிப்பு போல மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இந்தசூழலில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கைpt web

நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வெளுத்துவாங்கிய மழை!

சென்னை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மழை காரணமாக அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் கனமழை
தமிழகத்தில் கனமழைfile photo

மேகவெடிப்பு போல மழை

சென்னையில் மேகவெடிப்பு போல கனமழை கொட்டித் தீர்த்தது. பாரிமுனை பகுதியில் 17.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போன்று வடசென்னை, மத்திய சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டதைப் போன்று மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். இதே போன்று வட மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

tn rain update
tn rain updatePT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையின் போது அரசு பேருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பழுதாகி நின்றதால் பயணிகள் பேருந்தை இறங்கி தள்ளும் நிலை ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்துவாங்கியது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில், கழிவுநீரும் மழைநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி செல்லும் சர்வீஸ் சாலையில், ஒரு அடிக்கு மேல் மழைநீர் குளம்போல் காட்சியளித்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதுடன், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் காற்றுடன் பெய்த மழையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com