சென்னை| பெண் காவலரிடம் ஒன்றரை சவரன் நகைப்பறிப்பு.. குற்றவாளியை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயது பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து (10.30 மணியளவில்) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் ஏறியுள்ளார்.
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்து சென்றபோது திடீரென வந்த ஒரு நபர் பெண்காவலரின் வாயைப்பொத்தி அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினைப் பறித்துவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
பெண் காவலர் கூச்சலிடவே, ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் ஓடி வந்து அந்நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் அந்நபரை கைது செய்து விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்திய பாலு(40 )என்பதும், போதையில் செயின் பறிப்பில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், பிளாட்பார்மில் இறங்கி தனியாக நடந்து சென்ற பெண் காவலரின் வாயைப்பொத்தி நகையைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது பெண் காவலர் அவரைப் பிடிக்க முயற்சி செய்தபோது அவரைக் கீழே தள்ளிவிட்டு பாலியல் தொல்லைக் கொடுத்து அதன்பின்னர் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, வேலூர் கே.வி.குப்பம் பகுதியில் இதேபோலொரு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும், அச்சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்து செயின் பறிப்பில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சத்தியபாலு மீது பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சத்தியபாலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.