சென்னை: திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டாக்டர்
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் குமார் (37), மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் காரில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து தாம்பரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், காரில் இருந்த கண்ணாடிகள், பேட்டரிகள் திடீரென வெடித்துச் சிதறியது இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.