”நள்ளிரவு வரை காத்திருங்கள்”.. மிக்ஜாம் புயல் குறித்து பிரதீப் ஜான் கொடுத்த முக்கிய அப்டேட்

மிக்ஜாம் புயலால் சென்னை ஸ்தம்பித்துள்ள நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் முக்கியத் தகவல் ஒன்றை அறிவித்துள்ளார்.
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்pt web

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால் சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. சென்னை நகரமே மழைநீரில் தத்தளிக்கிறது.

வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.

வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் புயல் குறித்த அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார். சமீபத்தில் வானிலை ஆய்வு மண்டல தென் மண்டல தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதில், “அடுத்த இருதினங்களைப் பொருத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பொருத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “புயலின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் பெரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது. அதனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நள்ளிரவு வரை நிச்சயம் மழை இருக்கும். புயல் கரையை நெருங்கும் வரை அதிக மழைப்பொழிவு இருக்கும். புயலானது நாளை நெல்லூர் கவாலி பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

தற்போது புயலான சென்னை கடல்பகுதியை கடந்து நெல்லூரை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இருப்பினும், சென்னையில் சூறைக்காற்றுடன் கன மழையானது கொட்டித் தீர்க்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com