சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... அமராவதி ஆற்றிற்கு ஏற்பட்டுள்ள அபாயம்

கேரள அரசு உரிய அனுமதிகளை பெறவில்லை என்றால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை
சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைpt web

சிலந்தி ஆறு.... உடுமலை அமராவதி அணைக்கான நீர் ஆதாரங்களில் ஒன்று. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக கேரள மாநிலம் திகழ்கிறது.

கேரளாவின் சட்டமூணார் பகுதியில் உள்ள பாம்பாறு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் சிலந்தி ஆறு, தேனாறு, சின்னாறு ஆகியவை, அமராவதி அணையின் நீர் ஆதாரங்களாக உள்ளன.

இந்த சூழலில், இடுக்கி மாவட்டம் வட்டவடா ஊராட்சிக்கு உட்பட்ட பெருகுடா என்ற இடத்தில், தேனாறு மேல்பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. தடுப்பணை கட்டும் இடத்திற்கு அருகிலேயே கார்ப்பரேட் நிறுவனத்தின் மிகப்பெரிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு மறையூரை அடுத்த பட்டிச்சேரி என்ற இடத்தில் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் அமராவதி அணைக்கான நீர்வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் - பாஜக மாநில பொருளாளரிடம் சிபிசிஐடி விசாரணை

இதுதொடர்பாக திருப்பூர் மடத்துக்குளம் விவசாயி கலைச்செல்வன் கூறுகையில், “சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டி வருகிறார்கள். இதனால் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகும். உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இப்போதெல்லாம் வறட்சியான சமயம். நாங்கள் தென்னை விவசாயம் செய்துகொண்டுள்ளோம். தண்ணீரை விலைக்குத்தான் வாங்கி ஊற்றுகிறோம். இப்படி கேரள அரசு அணை கட்டினால், ஒரு கட்டத்தில் அமராவதி அணை முற்றிலும் வறண்டுவிடும்” என தெரிவித்தார்.

இதனிடையே, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தடுப்பணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல்துறை, தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அணை கட்டுவதால் தமிழக அரசுக்கு என்ன பாதிப்பு உள்ளது என்பது குறித்து தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com