edappadi palanisamy
edappadi palanisamypt

மு.க.ஸ்டாலினுக்கு BYE BYE சொல்லும் இபிஎஸ்? வித்தியாசத்திற்கு பின் இருக்கும் மாஸ்டர் மைண்ட் யார்?

ஸ்டாலினுக்கு BYE BYE சொல்லும் எடப்பாடி? வித்தியாசத்திற்கு பின் இருக்கும் மாஸ்டர் மைண்ட் யார்?
Published on

சட்டமன்ற தேர்தல் 2026ல்தான் என்றாலும், தமிழக அரசியல் களமோ இப்போதே தகிக்கத் துவங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத கால அவகாசம் இருந்தாலும், பஸ்ஸை எடுத்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் தொண்டர்களை சந்திக்கிறேன் என்று புறப்பட்டுவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி. அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் மாறுபட்டதாக இருக்கிறது. அதிமுகவில் அப்படி என்ன நடந்தது? ஸ்டாலினுக்கு 'BYE BYE' சொல்லும் எடப்பாடியின் கணக்கு என்ன? பரப்புரையில் தெரியும் வித்தியாசத்திற்கு பின்னணி என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

eps campaign on temple free land scheme
எடப்பாடி பழனிசாமிpt

இப்போதைய சூழலில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணி.. நிற்க, எண்டிஏ கூட்டணி.. தனித்தே நிற்கும் சீமான் மற்றும் விஜய் தலைமையிலான தனி அணி என்று நான்கு முனை போட்டி நிலவுகிறது. வழக்கமாக தேர்தல் தேதியை அறிவித்து, கூட்டணிக்கு இடங்களை முடித்து, வேட்பாளர் தேர்வுக்குப் பிறகே கட்சித் தலைவர்களிடம், ‘மதிப்புமிக்க வேட்பாளர்களே’ என்ற எண்ணம் மேலெழும்பும். அப்போதே மக்களைப் பார்க்க புறப்படுவார்கள். ஆனால், இந்த முறையோ, ஓரணியில் தமிழ்நாடு என்று திமுக பிரச்சாரத்தை கையில் எடுக்க, ‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற பேருந்தில் ஏறி புறப்பட்டுள்ளார் எடப்பாடி.

கடந்த 7ம் தேதி அவரது சுற்றுப்பயணம் துவங்கிய நிலையில், தொகுதிவாரியாக மக்களை சந்திக்கிறார் எடப்பாடி. விவசாயிகள், தொழிலாளர்களோடு உரையாடுவது.. கடலை வாங்குவது.. எலுமிச்சை விலை கேட்பது.. குறைகளை கேட்பது என்று துவங்கி, பேருந்தின் மேல் நின்றபடி பரப்புரையை செய்து வருகிறார். அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எடப்பாடியின் பரப்புரை மாறுபட்டதாக நிற்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருந்தாலும், 234 தொகுதிகளுக்கும் சென்று தொண்டை புன்னாகும் அளவுக்கு பரப்புரை செய்தது எடப்பாடிதான்.. ஏன், 2024 மக்களவைத் தேர்தலிலும் தனி ஆளாக போராடினார்.. ஆனால், நாற்பதிலும் தோல்வியே கிடைக்க, 2019ல் இருந்து தோல்வியும் துறத்த, 2026 ஐ ஒரு கை பார்த்தே தீர வேண்டும் என்று களமிறங்கியதாக சொல்கின்றனர் அதிமுக வட்டாரத்தினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிpt web

அதிலும், செல்லும் இடங்களில் மக்களை திரட்டி ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பது.. பாலத்திற்கு கீழ் நின்று, மேல் நிற்பது நான் கட்டிய பாலம்.. ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார் என்று சொல்வதில் துவங்கி, முதல்வர் ஸ்டாலினுக்கு ஒருமையில் சவால்விடுவது வரை பழனிசாமியின் பரப்புரை வித்தியாசப்பட்டுள்ளது. அதிலும், ஒவ்வொரு தொகுதியிலும் பரப்புரை முடிந்து புறப்படும்போது BYE BYE STALIN என்பதை மறக்காமல் சொல்லிவிட்டு, மக்களையும் சொல்ல வைக்கிறார் எடப்பாடி. இந்த 'BYE BYE' என்ற சொல்லாடலை எங்கேயோ கேட்டதுபோல உள்ளதல்லவா..

ஆம், 2024ல் மக்களவைத் தேர்தலோடு ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சினிமா ஸ்டைலில் அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, “BYE JEGAN.. BYE BYE JEGAN” என்று கூறி ஆட்டத்தையே மாற்றினார் பவன் கல்யாண். ஆளுங்கட்சியை மிரட்டும் தொணியில் பேசுவதில் துவங்கி BYE BYE சொன்னது வரை, வாய்ஸ் பவனுடையதாக இருந்தது. ஆனால், வார்த்தையோ வியூக வகுப்பாளருடையது. ஆம், அந்த தேர்தலில் பவன் கல்யாணுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தது ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Pramanya Strategy Consulting நிறுவனம்தான்.. பீரங்கி குண்டுகளை எய்த பீரங்களாக வியூக வகுப்பாளர்கள் Sravanth மற்றும் Hari ஆகிய இருவர் செயல்பட்டிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் நடந்து முடியும் வரை இந்த நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது அதிமுக.. இந்த அணி வகுத்துக்கொடுக்கும் வகையிலேயே தனது பரப்புரையை செய்து வருகிறார் எடப்பாடி. மக்கள் மத்தியில் நின்றுகொண்டு, உங்களுக்கெல்லாம் ஆல் பாஸ் போடச் சொன்னது நான்தான் என்பதில் துவங்கி ஸ்டாலினுக்கு நீ.. வா.. போ என்று ஒருமையில் சவால்விடுவது வரை பரபரக்கிறார் எடப்பாடி. 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது, ஆ. ராசா தன்னை தரக்குறைவாக பேசி விமர்சித்தபோது, பரப்புரையின்போதே நா தழுதழுத்து கண்ணீர் சிந்தினார் எடப்பாடி.. ஆனால் இப்போதோ, கங்கா சந்திரமுகியாக மாறிய கணக்காக, ஸ்டாலினுக்கு சவால் விட்டு வருகிறார்.. என்றால், இவருக்கு பின்னால் இருக்கும் வியூக வகுப்பு அணியின் கணக்குதான் காரணம் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

இபிஎஸ் கேள்வி
இபிஎஸ் கேள்விமுகநூல்

சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூட, 234 தொகுதிகளிலும் மக்களை சென்று சந்திக்க வேண்டும் என்பதாலே பயணத்தை இப்போதே தொடங்கிவிட்டேன் என்கிறார். ஆனால், கட்சியின் பிளவால் சோர்ந்து கிடக்கும் தொண்டர்களை தட்டி எழுப்பவும், உற்சாகப்படுத்தவுமே இந்த பயணம்.. 2026 துவக்கத்தில் இன்னொன்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆக, அடித்து ஆடுவது என்று முடிவெடுத்து கோதாவில் குதித்திருக்கும் எடப்பாடி, எதிர்வரும் நாட்களில் பரப்புரையை இன்னும் கூர்மைபடுத்துவார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com