”அண்ணாமலை ஒரு பிரதமர் மெட்டீரியல்”.. அடித்துச் சொல்லும் பிரமுகர்கள்.. விரிவான பின்னணி என்ன?
தமிழக பாஜக தலைவர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அப்பதவியில் இருக்கும் அண்ணாமலை பிரதமர் மெட்டீரியல்.. அவரது அடுத்தகட்ட வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கும் என்று கணிக்கின்றனர் சில முக்கியப்புள்ளிகள். மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவில் தொடங்கி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வரை இக்கருத்தை முன்வைத்துள்ளனர். பாஜகவில் நடப்பது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வியூகம் வகுத்து வரும் நிலையில், தமிழக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறது பாஜக. மக்களவைத் தேர்தலைத்தான் விட்டுவிட்டோம், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்த பாஜக தேசிய தலைமை, அதற்கான வேலைகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே பாஜகவின் டெல்லி மேலிடத்தை நேரில் சந்திக்கும் அதிமுக தலைவர்கள், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இத்தோடு, தமிழக பாஜகவில் தலைவராக இருக்கும் அண்ணாமலையின் பதவி காலம் முடிவடைந்ததாலும், உருவாக இருக்கும் கூட்டனிக்கு அவர் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதாலும், புது தலைவரை நியமிக்க ஆலோசித்து வருகிறது பாஜக தேசிய தலைமை.
தமிழக பாஜகவின் தற்போதைய நிலை, சட்டமன்ற தேர்தல் சூழல் எப்படி இருக்கு என்று தேசிய தலைமையிடம் அண்ணாமலை விரிவாக விளக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய அமைச்சராகவோ.. தேசிய அளவிலான பொறுப்பிலேயோ அமரவைக்கப்படலாம் என்கிறது பாஜக வட்டாரம். புது தலைவரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணமும் கவனம் ஈர்த்திருக்கிறது.
இந்த நிலையில்தான், தமிழக பாஜகவில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை, கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுவந்த அண்ணாமலைக்கு, அவருக்கான அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அதிமுக கூட்டணி அமைவதால் சிறிது காலத்திற்கு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படும் அண்ணாமலை, 2029 நாடாளுமன்ற தேர்தல் அல்லது 2031 சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.
அவரது கணக்குப்படி, பாஜகவில் அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்கு அண்ணாமலை கலமாடலாம்.. மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு எதிர்காலம் ஏற்றமாகத்தான் இருக்கும். அவரை பிரதமர் வேட்பாளர் வரை கொண்டு செல்லலாம்.. அந்த அளவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், அண்ணாமலையை பாராட்டி பேசினார். அப்போது, “தமிழன் எப்போது வருவானோ.. எப்போது இந்தியாவை ஆள்வானோ என்று நாம் எல்லாரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. இதனை நான் பெயரளவில் சொல்லவில்லை. மனதில் பட்டது. மனதில் உணர்ந்தது. டெல்லியில் பார்த்தாலும் சரி.. இடையில் பார்த்தாலும் சரி. அண்ணாமலையை ஒரு பிஎம் மெட்டீரியல் என்று சொல்வேன்” என்றார்.
தமிழக பாஜகவைப் பொருத்தவரை, சமீபத்திய ஆண்டுகளில் தலைவர்களாக இருந்த தமிழிசையோ.. எல். முருகனோ இந்த அளவுக்கு பேசுபொருளாக, குறிப்பாக PM Candidate என்பதுவரை பேசுபொருளாக இருந்ததில்லை. ஆனால், அண்ணாமலையின் தலைமை பதவி மாற்றப்படும்போது இப்படி பேசுபொருளாக மாறி இருக்கிறது.