\
Sanitary napkin facility at the airport
Sanitary napkin facility at the airportX

நடிகையின் வீடியோவால் வந்த மாற்றம் : விமான நிலையத்தில் நாப்கின் வசதி.. வெளியான அறிவிப்பு!

சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்து லேடிஸ் ரெஸ்ட் ரூம்களிலும், புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மிஷின்கள் பொருத்தப்பட உள்ளது.
Published on
Summary

நடிகை லதா ராவ் சென்னை விமான நிலையத்தில் மாதவிடாய் அவசரநிலையில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாத அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்தது பெரும் விவாதமாகியது. தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயன்படுத்தும் இடத்தில் இத்தகைய அடிப்படை வசதி இல்லாததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து விமான நிலைய நிர்வாகம் அனைத்து லேடிஸ் ரெஸ்ட் ரூம்களிலும் 36 புதிய நாப்கின் வெண்டிங் மெஷின்களை அமைக்க முடிவு செய்துள்ளது.

நடிகை லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டிருந்தார். அதாவது, சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக, விமான நிலையத்திற்கு லதா ராவ் சென்றபோது, அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவரது பையில் சானிட்டரி நாப்கின் பேட்கள் இல்லாததால்,விமான நிலையத்தில் பணத்தை செலுத்தி, நாப்கின் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டதாகவும், அதற்கு அப்படியான வசதிகள் எதுவும் இல்லை என்று, அதிகாரிகள் கூறியதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இறுதியில், கேட் எண் 7-க்கு அருகில் மருந்தகம் ஒன்று இருப்பதையும், அங்கு சானிட்டரி நாப்கின் விற்கப்படும் என்பதையும் ஒருவர் கூறியதால், கேட் ஒன்றில் இருந்து 7-க்கு பதறியடித்து சென்று, நாப்கினை வாங்கிக் கொண்டு, திரும்பி வந்ததாகவும் கூறியிருந்தார்.

அவரின் வீடியோவை பகிர்ந்த பலரும் தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வாங்கும் வசதி கூட இல்லாதது குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். புதிய தலைமுறையும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

Chennai AIrport

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்து லேடிஸ் ரெஸ்ட் ரூம்களிலும், புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மிஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் லேடிஸ் ரெஸ்ட் ரூம்களில், சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் செயல்பாட்டில் இருந்தன. அதை தவறாக உபயோகிப்பதாக புகார்கள் வந்ததால், அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், தற்காலிக ஏற்பாடாக, சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு லேடிஸ் ரெஸ்ட் ரூம்களிலும், சானிட்டரி நாப்கின் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளவும் என்று போன் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அந்த நம்பரில் தொடர்பு கொண்டால், அடுத்த இரண்டு நிமிடங்களில், விமான நிலைய பெண் ஊழியர் சானிட்டரி நாப்கின் கொண்டு வந்து கொடுப்பார். இது தற்காலிக ஏற்பாடு தான் என்றும் கூறியுள்ளனர். நடிகை லதா ராவ் வீடியோவால் வந்துள்ள இந்த மாற்றத்தை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sanitary napkin facility at the airport
சிறுநீரால் இமயமலைக்கு ஆபத்து: பேரழிவின் விளிம்பில் பனிப் பாறைகள்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com