கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! மார்ச்-15 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் தியாகதுருகத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சியில் 15 சென்டிமீட்டரும், கோமுகி அணை பகுதியில் 12 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பொதுவாக இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 3-6 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏனைய இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி வெப்பநிலை இருந்தது.
பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வரும் 16 ஆம்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.