கரூர் துயரம் | ஜனவரி 12 சிபிஐ விசாரணை.. தவெக தலைவர் விஜய் ஆஜராக சம்மன்!
கரூரில் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல்படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதியளிக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட புலனாய்வுக் குழுவையும் நியமித்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, தவெகவின் மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில்தான், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஜனவரி-12 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.ஐ சம்மன் அளித்துள்ளது.

