கரூர் | 41 பேர் உயிரிழப்பு விவகாரம்.. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி.!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மார்ச் 17-ஆம் தேதி ஆஜராகவுள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, விஜய் பரப்புரைக்கு தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெக தரப்பில் இருந்து இச்சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழ்நாடு காவல்துறை சரியாக பாதுகாப்பு அளிக்காததுமே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. தொடர்ந்து, தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணக்கு உத்தவிட்டது.
இந்நிலையில் தான், கரூரில் வேலுசாமிபுரத்தில் தனது விசாரணையை தொடங்கிய சிபிஐ. தவெக நிர்வாகிகள் என். ஆனந்த, ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாலர் மதியழகன் உள்ளிட்டோரிடம் விசாரணையை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான நிலையில், ஜனவரி 19-ம் தேதி மீண்டும் ஆஜரானார். இதற்கிடையில், மூன்றாவது முறையாக இன்று (மார்ச் 10) விசாரணக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் பணிகளை காரணம் காட்டி டெல்லி செல்வதை தவிர்த்திருக்கிறார் விஜய்.
அதேசமயம், நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு அவர் தரப்பில் இருந்து உரிய பதிலளிக்கவில்லை எனவும் ஆங்கில செய்தி ஊடகம் பதிவிட்டிருந்தது. இந்த சூழலில் தான், செய்தித்தாள் ஒன்றிற்கு செந்தில் பாலாஜி அளித்திருந்த பேட்டியில், ” இரு தினங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, என்னுடைய தந்தையிடம் நான் எங்கே எனக் கேட்டுள்ளனர். நான் சென்னை சென்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் சம்மன் எதுவும் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் தான், இன்று (மார்ச் 10) சிபிஐ விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மார்ச் 17-ம் தேதி செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

