கரூர் துயரம் | சிபிஐ விசாரணையில் விஜய் நாளை பங்கேற்கவில்லை?.. பேச்சு வார்த்தையில் என்.டி.ஏ.?
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக, விஜய் பரப்புரைக்கு தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணக்கு உத்தவிட்டது.
இதைத்தொடர்ந்து, கரூரில் வேலுசாமிபுரத்தில் தனது விசாரணையை தொடங்கிய சிபிஐ. தவெக நிர்வாகிகள் என். ஆனந்த, ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாலர் மதியழகன் உள்ளிட்டோரிடம் விசாரணையை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, ஜனவரி 12ஆம் தேதி விஜய் விசாரணைக்கு ஆஜரானார். இதைத் தொடர்ந்து, 2 வது முறை ஜனவரி 19- ஆம் தேதியும் ஆஜரானார்.
இந்த சூழலில் தான், 3-ம் கட்ட விசாரணைக்கு நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய் தொடர்ச்சியான நிர்வாகிகள் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம், நாளை தவெக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டி சம்மன் அனுப்பப்பட்டிருப்பதால், நாளைய வேட்பாளர் நேர்காணல் நடைபெறுமா? எனக் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான், தவெக தலைவர் விஜய் நாளை சிபிஐ விசாரணக்கு ஆஜராக போவதில்லை எனவும் வேட்பாளர் நேர்காணல் நாளை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, தேர்தல் பணிகள் காரணமாக விஜய், விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் சிபிஐ-யிடம் அவகாசம் கேட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தான், தற்போது நாளை விஜய் டெல்லி செல்லப்போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, என்.டி.ஏ கூட்டணியில் விஜயை இணைப்பதற்கு பாஜக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். அதற்காக, ஆந்திர துணைமுதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வழியாக விஜயிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகவிருக்கிறது. மேலும், சிபிஐ, படத் தணிக்கைக் குழு வழியாக விஜயை பணிய வைக்க மத்திய அரசு முயல்வதாக கூறப்படும் நிலையில் தான், நாளை டெல்லி செல்வதை விஜய் தவிர்த்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், இன்று மறுத்தணிக்கைக் குழு பார்வையிடுவதாக இருந்த ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை அதிகாரி ஒருவரின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தள்ளிப்போய் இருக்கிறது.

