”கதவ அடைச்சிட்டு சிலிண்டரில் டீ போட்டுருக்காங்க” - மதுரை ரயில் தீ விபத்துக்கான அதிர்ச்சி காரணம்!

மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
train fire accident
train fire accidentpt web

மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணிகள் சிலர் தேநீர் தயாரிக்க கேஸ் சிலிண்டரை பற்றவைத்த போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தனியார் பெட்டியில் இருந்த பயணிகள் லக்னோவில் இருந்து கடந்த 17ஆம் தேதி புறப்பட்டு கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் சுற்றுலாவை முடித்துவிட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலமாக நாளை சென்னை சென்று அங்கிருந்து லக்னோ செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளனர்.

ஐ.ஆர்.சி.டி.சி போர்டல் மூலமாக யார் வேண்டுமென்றாலும் ரயிலை தனியாக பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ரயிலில் பயணிப்பவர்கள் எரிவாயு பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இன்று அதிகாலை 5:15 மணிக்கு தனியார் பெட்டி மதுரை யார்டில் நின்று கொண்டிருந்ததில் தீ பற்றி உள்ளதாக தகவல் கிடைத்தது. 5:45க்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 7:15க்கு மற்ற எந்த ரயிலிலும் பரவாதவாறு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தனியார் பெட்டி என்பதால் நேற்று நாகர்கோவிலில் இருந்து புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் வழியாக மதுரைக்கு 3:47 மணிக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தனியாக பிரித்தெடுக்கப்பட்டு யார்டில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டரை கொண்டு வந்தது தான் இந்த விபத்திற்கு காரணம். தீ எரிவதை முதலில் கண்ட பயணிகள் வெளியே குதித்து தப்பிவிட்டனர்” என்று தெற்கு ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரயில் பயணிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய/வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக்கொண்டு உயிரைப் பணயம் வைக்காமல் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்குமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்கள், பட்டாசுகள், அமிலம், மண்ணெண்ணெய், பெட்ரோல், தெர்மிக் வெல்டிங், அடுப்பு போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது 1989 ரயில்வே சட்டம் பிரிவு 67,164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, கதவை மூடிவிட்டு கேஸ் சிலிண்டரில் டீ சமைத்துள்ளதே விபத்திற்கு காரணம் என்று கூறினார்.

அதேபோல், “மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே எஸ் பி செந்தில்குமார் மதுரை ரயில் தீ விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். ரயிலில் சிலிண்டர் மட்டுமில்லாமல் சமைப்பதற்கான விறகு உள்ளிட்டவற்றை ரயிலில் வைத்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com